மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவராக கடந்த 2000 முதல் 2013 வரை அருண் ஜேட்லி பணியாற்றினார். அப் போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றதாக அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் அசுதோஷ், குமார் விஷ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் பாஜ்பாய் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜேட்லி கோரியுள்ளார்.
இந்த வழக்கு பெருநகர மாஜிஸ்திரேட் சுமித் தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அருண் ஜேட்லி, கேஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் கேஜ்ரிவால் உட்பட 6 பேர் மீதும் மாஜிஸ் திரேட் சுமித் தாஸ் குற்றச்சாட்டு களைப் பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணை மே 20-ம் தேதி தொடங்கும் என்று மாஜிஸ்திரேட் அறிவித்தார்.