இந்தியா

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: ஒடிசாவில் மீண்டும் அரங்கேறிய அவலம்

செய்திப்பிரிவு

ஒடிசாவில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அதிக தொகை கேட்டதால் உயிரிழந்த தாயின் உடலைத் தள்ளுவண்டியில் வைத்து மகன் எடுத்துச் சென்ற அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்குப் பணம் செலுத்த முடியாததால் உயிரிழந்த மனைவியின் உடலை 10 கி.மீ தூரம் வரை கணவர் தூக்கிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அன்குலா கிராமத்தைச் சேர்ந்தவர் பானா திரிகா (65). அண்மையில் வயிற்று வலியால் துடித்த திரிகாவை அவரது மகன் குணா, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள், திரிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து 4 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு தாயின் உடலை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் குணா விலை பேசியுள்ளார். ஆனால் அவர்கள் அதிக தொகை கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த குணா அருகில் இருந்த தள்ளு வண்டியில் தனது தாயின் உடலை வைத்து சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT