சைக்கிள் சின்னத்துக்கு முலாயமும் அவரது மகன் அகிலேஷ் யாதவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரில் வலம் வருகிறார் இன்னொரு மகன்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனம் முலாயம் சிங் யாதவுக்கும் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளது. இதனால் கட்சியில் கடும் குழப்பம் நிலவுகிறது. இருவரும் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டி உள்ளனர்.
இந்நிலையில், முலாயம் சிங்கின் 2-வது மனைவி சாதனா குப்தாவுக்கு பிறந்த மகன் பிரதீக் யாதவ், ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 வரை மதிப்புள்ள லம்போர்கினி காரில் சுற்றிவருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் இத்தாலியில் தயாரிக்கப்படுகிறது. இந்த காருடன் பிரதீக் யாதவ் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்தப் படத்தில் ‘பிரவுனி’ என்ற நாயும் இடம்பெற்றுள்ளது. புகைப்படத்துக்கு, ‘நான், பிரவுனி, புளூ போல்ட் சில்லின் (லம்போர்கினி கார்)’ என்று படவிளக்கம் அளித்துள்ளார் பிரதீக் யாதவ். இது வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
‘சமாஜ்வாதி’ என்பது இந்தி சொல். இதற்கு பொதுவுடைமைவாதி (சோஷலிஸ்ட்) என்று பொருள். கட்சியின் பெயரை சோஷலிஸ்ட் என்று வைத்திருக்கும் முலாயமின் 2-வது மனைவிக்குப் பிறந்த மகன் லம்போர்கினி காரில் வலம் வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.