ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் (வனத்துறை) அதிகாரிகளின் பிற துறை மற்றும் வெளிநாட்டுப் பணிக்கான அனுமதிக் காலம் 5 ஆண்டுகளில் இருந்து தற் போது 7 ஆண்டுகளாக உயர்த்தப் பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணி யாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் தலைமையின் அனுமதியுடன் பிற துறைகளிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்று பணியாற்றுகின்றனர். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இது பல நேரங்களில் போதாமல் உள்ளதாகவும், இந்தக் காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு வந்தது. இதை ஏற்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய, மாநில அரசுகளின் அனைத்து அமைச் சகங்களுக்கும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
இதன்படி அதிகாரிகளின் பிற துறை மற்றும் வெளிநாட்டுப் பணிக்கான அனுமதிக் காலம் 5 ஆண்டுகள் என்ற விதி தளர்த் தப்பட்டுள்ளது. பொது நோக்கத் துக்காக அந்த அதிகாரியின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். இதற் கான அனுமதியை அந்த அதிகாரி பணியாற்றி வரும் அமைச்சகங்களிடம் முறையாகப் பெறவேண்டும். அப்போது இந்த அவசரத் தேவைக்கான காரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இதர துறைகளிலிருந்து பெறப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை ஏழு ஆண்டுகளுக்கும் மேல் நீட்டித்துக்கொள்ளும் வகையிலும் விதிகளை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை தளர்த்தியுள்ளது. ஆனால் அதற்கு ‘தற்காலிக பதவிக்கான நியமன விதிகள்’ அதற்கேற்ற வகையில் திருத்தப்படவேண்டும். இவ்வாறு திருத்தப்படாத பட்சத்தில் அந்த அதிகாரியின் பதவிக் காலத்தை 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
உத்தரவின் பின்னணி
மத்திய மற்றும் மாநில அரசு களின் கீழ் பணியாற்றும் அதிகாரி கள் பிற துறைகள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்று வது உண்டு. இவ்வாறு வெளிநாடு களுக்கு செல்பவர்களில் சிலர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி விடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
தாங்கள் சார்ந்துள்ள அரசுகளின் செல்வாக்கை பயன்படுத்தி இவர்கள் செல்லும் நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களின் முக்கியப் பதவிகளில் சேர்வதும் நடைபெறுகிறது. முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக தங்கி விடும் இந்த செயலை தடுக்க முடியாமல் இருந்தது. சிலர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி சம்பாதித்த பின் மீண்டும் தங்கள் அரசுடன் ‘சமரசம்’ பேசி இணைவதும் நடைபெற்று வந்தது.
இது பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அவர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் ஆலோசனையும் நடத்தி இருந்தார். இது குறித்த விரிவான செய்தி கடந்த ஆண்டு ஜூன் 18-ல் ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து இந்த புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.