நடிகர் பவன் கல்யாண் வெள்ளிக் கிழமை தொடங்க உள்ள 'ஜன சேனா' கட்சி ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜன சேனா கட்சி என்னுடையது என உரிமை கோரி தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒருவர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக உள்ள மத்திய அமைச்சர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் ஹைதராபாத் ஹைடெக்ஸ் பகுதியில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் போன்ற விவரங்களை வெள்ளிக்கிழமை தெரிவிப்பார் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் 48 நிமிடங்கள் பேசுவார். சிரஞ்சீவியுடன் அவருக்கு மனக்கசப்பா என்பதும் தெரிய வரும்.
பவண் கல்யாண் பேசுவதை, தெலங்கானா மற்றும் சீமாந்திரா பகுதிகளில் 28 முக்கிய நகரங்க ளில் ராட்சத எல். சி .டி தொலைக் காட்சிகள் அமைத்து ஒளிபரப்ப ரசிகர்கள் தரப்பில் ஏற்பாடு நடந்து வருகிறது.
‘ஜன சேனா என்னுடைய கட்சி’
இந்த நிலையில், ஹைதராபாத் நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஜன சேனா கட்சி என்னுடையது என உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார். ஜன சேனா பெயரை நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய அனுப்பி உள்ளேன். கடந்த 6 மாதங்களாக ஜன சேனா கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். தெலங்கானா மாநிலம் குறித்து போராட கட்சி தொடங்க திட்டமிட்டு இருந்தேன்.வரும் தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்திருந்தேன்.
கட்சியின் கொடி. கொள்கைகள், செயற்குழு உறுப்பினர்கள் குறித்தும் தெரி வித்து இருந்தேன். பவன் கல்யாண் எனது கட்சி பெயரிலேயே புதிய கட்சி தொடங்க உள்ளது எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத் தையும் அளித்து உள்ளது. எனக்கு தகுந்த நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ஆராய்வதாக தேர்தல் ஆணையர் பிரம்மானந்தம் தெரிவித்து உள்ளார்.
சிரஞ்சீவியின் மற்றொரு தம்பியும் நடிகருமான நாகபாபு வியாழக்கிழமை ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: எனது ஆதரவு கடைசி வரை சிரஞ்சீவிக்குத்தான். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். சிரஞ்சீவியின் ரசிகர்களும் அவரின் பக்கம்தான். ரசிகர்களை திசை திருப்ப சதி நடக்கிறது என்றார் நாகபாபு.