2014- நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், மாநில காவல்துறை டி.ஜி.பி-க்கள் மற்றும் ஐ.ஜி-க்கள்மாநாட்டில் பேசிய பிரதமர், தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதால் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். இது தவிர நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மதமோதல்கள் வருத்தம் அளிக்கின்றன.
முசாபர்நகர் கலவரம் குறித்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் உள்ளூரில் உருவாகும் கலவரங்களை மதவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை தடுக்க வேண்டும். மதமோதல்கள் ஏற்படும் போது அதை அச்சம் இல்லாமல், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். இந்த பொறுப்பு மாநில டி.ஜி.பி-க்கள் கைகளில் தான் இருக்கிறது என்றார்.
சமூக வலைதளங்கள், சில சமூக விரோதிகளால் தவறாக பயன்படுத்துப்படுகின்றன. முசாபர்நகர் கலவரத்தின் போதும் இது நடைபெற்றது. எனவே, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் இஷ்டத்துக்கு பதியப்படும் தகவல்களை தடுக்க வழி வகுக்க வேண்டும் என்றார்.