வேளாண் நோக்கங்களைத் தவிர இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ முடியாது என்று மத்திய அரசு சட்டமியற்றி உத்தரவிட்டதையடுத்து பாஜக அரசு மீது நாடு முழுதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கேரளாவில் இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை இந்த உத்தரவு சங்பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவற்றின் ஆசிகளின் படி நடந்தேறியதாக கடுமையாக விமர்சனம் செய்தனர்.
நாட்டைத் துண்டாடும் முயற்சியே இது என்று விமர்சனம் செய்த இடதுசாரிகள் இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆட்டத்திட்டம் என்று சாடினார்.
முதல்வர் பினரயி விஜயன் கூறும்போது, லட்சோபலட்ச ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை இந்தத் தடைச் சட்டம் பாதிக்கும். அவர்கள் உணவையே பறிப்பதாகும் இது. இத்தகைய அறிவிக்கையை வெளியிடும் முன்பு மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் இருப்பது கூட்டாட்சிக் கொள்கை மீது பாஜக-வுக்கு இருக்கும் ‘மரியாதை’யைக் காட்டுகிறது. இன்று மாட்டிறைச்சித் தடை நாளை மீனிறைச்சித் தடையாக மாறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? என்று சாடினார்.
மாநில கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் கே.ராஜு கூறும்போது, “சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. மேலும் கால்நடைகள் போக்குவரத்துக்கும் இது பெரிய இடையூறு விளைவிக்கிறது. மாநிலங்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கும் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் இந்த முடிவு பெரும் இடையூறாகும்” என்றார்.
ஆனால், உணவுப்பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று விலங்குகள நல/உரிமை அமைப்புகள் கொண்டாடுகின்றன.