வடகிழக்கு பகுதி மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் இனிவெறித் தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக சமூக போராளி இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி கல்வி பயின்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் அவர் தங்கியிருந்த வீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து டெல்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக நாடு முழுவதிலும் வடகிழக்கு மக்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் வேதனை அளிப்பதாக சமூக போராளி இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது வரவேற்கத்தக்கது அல்ல என்றும் இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.
மணிப்பூரின் மலோம் கிராமத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு அசாம் வீரர்களால் பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முன்னாள் பத்திரிகையாளரும் சமூக போராளியுமான இரோம் ஷர்மிளா, ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை நீக்க வேண்டும் என்று 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
இதனால் தற்கொலைக்கு முயற்சித்ததாக இம்மாதம் (நவம்பர்) கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிறார்.