திரிணமூல் எம்.பி.யும், நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சுதிப் பாந்த்யோபாத்யாய் சிபிஐ-யால் கைது என்று எழுந்துள்ள செய்தியையடுத்து நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல் விடுத்துள்ளார்.
“இந்தக் கைது பிரதமர் அலுவலகம் கொடுத்த அழுத்தத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிட்பண்ட் நிறுவனங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பல்கிப்பெருகியது. பாபுல் சுப்ரியோ, சுஜன் சக்ரவர்த்தி ஆகியோரையே கைது செய்ய வேண்டும்.
சுதிப் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், பெங்கால் மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். தாங்கள் விரும்பியதை பலவந்தமாக அடைய முடியாது. சாமானிய மக்களின் குரல்வளையை நீங்கள் நெறிக்க முடியாது.” என்றார்.
ஆனால் சிபிஐ இதுவரை கைது நடவடிக்கையை உறுதி செய்யவில்லை. டெல்லி சிபிஐ வட்டாரங்கள் சுதிப் கைது செய்தியை மறுத்துள்ளன. ரோஸ்வாலி சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கடந்த புதனன்று சுதிப் பாந்த்யோபாத்யாய் சிபிஐ-யினால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.