இந்தியா

பெங்களூருவில் புதுவீட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கோரி ரவுடி மனு

இரா.வினோத்

பெங்களூரு ரவுடி ஒருவர் தான் புதிதாக கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்களைத் தூவ அனுமதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள முல்லூரைச் சேர்ந்தவர் முனி ராஜூ (45). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முனி ராஜூ தற்போது ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வருகிறார்.

அண்மையில் பல கோடி ரூபாய் செலவிட்டு முல்லூரில் பிரம்மாண்டமான பண்ணை வீட்டையும் கட்டி முடித்துள்ளார். அந்தப் பண்ணை வீட்டின் புதுமனை புகுவிழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ராஜூ முடிவெடுத்தார். இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாநகர போலீஸ் ஆணையரிடம் அணுகியபோது அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முனி ராஜூ தனக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகவும், புதுமனை புகுவிழாவுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவ அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி போபண்ணா, ‘‘புதிய வீட்டின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்களைத் தூவ வேண்டுமா? இதுதான் உங்களது அடிப்படை உரிமையா? இவ்வளவு ஆடம்பரமாக புதுமனை புகுவிழா நடத்த வேண்டுமா? ஏழைகள் பலர் வீடு இல்லாமல் சாலையில் வசிக்கின்றனர். அந்தப் பணத்தில் அவர்களுக்கு வீடு கட்டித் தரலாமே?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அத்துடன் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT