ரஷியா, சீனாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், கூடங்குளம் அணு உலைகள் பற்றி குறிப்பிடவில்லை.
ரஷியா, சீனாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். தன் பயணத்துக்கு முன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், எல்லையில் அடிக்கடி நிகழும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சமரச ஒப்பந்தம் காண்பதில் உள்ள சிக்கலான அம்சங்கள் பற்றி, சீன பிரதமர் லீ கெகியாங்குடன் பேச்சு நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு இரு புதிய அணு உலைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தம் இறுதி பெற தடையாக இருக்கும் அணு உலை விபத்து இழப்பீடு சம்பந்தமாக பேசுவது குறித்து அவர் தனது அறிக்கையில் எதுவும் தெரிவிக்கவில்லை.
மாஸ்கோவுக்கு 21-ம் தேதி செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய அதிபர் புதினுடன் 14-வது ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
கூடங்குளம் அணு உலைகள்
இந்தியாவின் அணு சக்தி சட்டத்தில் உள்ள அணு உலை விபத்து இழப்பீடு பிரிவு விஷயத்தில் ரஷியா கவலை கொண்டுள்ளது. அதற்காக அந்த நாட்டை சமாதானப்படுத்தும் விதத்தில் விபத்தால் ஏற்படும் சேதத்துக்கு காப்பீடு எடுப்பது போன்ற யோசனைகளை புது டெல்லி முன்வைத்துள்ளது. அணு உலை சாதனங் களை விநியோகிக்கும் வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள் விபத்து ஏற்பட்டால் சுமக்கவேண்டிய இழப்பீடு அளவு பற்றி இந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்பான ஆரம்ப திட்டம் அரசுகள் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டதால் கூடங்குளம் 3 மற்றும் 4வது உத்தேச பிரிவுகளுக்கான அணு உலைகளுடன் விபத்து இழப்பீடு சட்டத்தை தொடர்புப்படுத்திடுவதை ரஷியா எதிர்க்கிறது. விபத்து ஏற்பட்டால் அணு உலைகள் மற்றும் சாதனங்கள் விநியோகிப்பாளர்கள் ஏற்க வேண்டிய சேத அளவு, மற்றும் இழப்பீடு அளவை அணு சக்தித்துறையுடன் இணைந்து மதிப்பிடும் வேலை ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்போரேஷன் வசம் இந்தியா ஒப்படைத்துள்ளது.
கூடங்குளம் 3 மற்றும் 4வது பிரிவுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மன்மோகன் சிங்கின் மாஸ்கோ பயணத்தில் இறுதியாகும் என அதிகார வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, ரஷிய அதிபர் புதின் திங்கள்கிழமை அளிக்கும் விருந்தின்போது இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள். அன்றைய தினமே மன்மோகன் சிங்கை கௌரவித்து மாஸ்கோ அரசு சர்வதேச உறவு உயர்கல்வி நிறுவனம் சார்பில் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
ரஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு, 22-ம் தேதி சீனா செல்லும் மன்மோகன் சிங் 23ம் தேதி அந் நாட்டுப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துப் பேசுவார். அதிபர் ஷீ ஜின்பெங்கையும் பிரதமர் சந்தித்துப் பேசுவார்.