உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் திரட்டிப் போட்டியிடுவது என அகில இந்திய மஜ்லீஸ் ஏ இத்தஹாதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி முடிவு செய்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வின் முஸ்லிம் கட்சியான ஏஐஎம்ஐஎம் அம்மாநிலங்களுக்கு வெளியே முதன்முறையாக கடந்த 2014-ல் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது. இதில் 2 தொகுதிகளில் வெற்றியும் 3 தொகுதிகளில் இரண்டாம் இடமும் பெற்றனர். இதையடுத்து டெல்லி சட்டப்பேரவைக்கும் போட்டியிட ஏஐஎம்ஐஎம் திட்டமிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட் டது. இதற்கு பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிடும் என காரணம் கூறப்பட்டது.
இதையடுத்து பிஹார் சட்டப் பேரவை தேர்தலில் முதலில் 24 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த இக்கட்சி பின்னர், வெறும் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இதையடுத்து வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிட முயன்று வருகிறது. இதற்காக கடந்த 13-ம் தேதி லக்னோ நகரில் முதல் பிரசாரக் கூட்டம் நடத்தினார் ஒவைசி. இதையடுத்து இம் மாநிலத்தில் முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் திரட்டி தேர்தலைச் சந்திக்க ஒவைசி முடிவு செய் துள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏஐஎம்ஐஎம் கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் ஷவுகத் அலி கூறும்போது, “உ.பி.யில் சமாஜ் வாதி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகள் தவிர எந்தக் கட்சி யுடனும் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம். தலித்துகளுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் இங்கு அதிகம். எனவே, ‘ஜெய் மீம்! ஜெய் பீம்!’ எனும் எங்கள் கோஷப்படி இருவரும் ஒன்றுசேர்ந்தால் சமாஜ் வாதிக்கு தோல்வி நிச்சயம். இதற்கு முன் முஸ்லிம்களை ஒன் றிணைப்பது அவசியம் என்பதால் முஸ்லிம் கட்சிகளுடன் பேசி வருகிறோம்” என்றார்.
உ.பி.யில் முஸ்லிம் கட்சிகள் பல உள்ளன. இதில் கவுமி ஏக்தா தளம் தலைவரான முக்தார் அன்சாரி யுடன் உ.பி.யின் ஆளும் சமாஜ்வாதி கட்சி கடந்த மாதம் கூட்டணி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு, சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றிபெற்ற அன்சாரி யின் பெயர் உ.பி. கிரிமினல்கள் பட்டியலில் இருப்பது காரணம் ஆகும். இதனால் அடுத்த நாளே அன்சாரியுடனான கூட்டணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட் டது. தற்போது, அன்சாரி கட்சியுடன் ஒவைசி கட்சி கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடங்கியிருப்பதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் சுமார் 150-ன் வெற்றியை முஸ்லிம் வாக்குகள் முடிவு செய்வதாகக் கருதப்படுகிறது. இங்கு தற் போதுள்ள 69 முஸ்லிம் எம்எல்ஏக் களில் 40 பேர் சமாஜ்வாதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.