இந்தியா

மங்கள்யான் கோளாறை சீரமைத்தது இஸ்ரோ: ஃபேஸ்புக்கில் அப்டேட்

செய்திப்பிரிவு

'மங்கள்யான்' விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, செவ்வாய்கிரகத் திட்டம் பற்றிய ஃபேஸ்புக் பக்கத்திலும் காலை 5.10 மணியளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் முன்னேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் நேற்று (திங்கள்கிழமை) சிறு கோளாறு ஏற்பட்டது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், கடந்த 7 ஆம் தேதி முதல் படிப்படியாக புவி வட்டப்பாதையின் ஒவ்வொரு சுற்றாக முன்னேற்றப்பட்டு அதன் வெளியேறு வேகம் அதிகரிக்கப்படுகிறது.

நேற்று (திங்கள்கிழமை)அதிகாலை 2.06 மணிக்கு 3ஆவது சுற்றுப்பாதையில் இருந்து 4 ஆவது சுற்றுப்பாதைக்கு மங்கள்யான் முன்னேற்றப்படுவதாக இருந்தது. இதன் மூலம் பூமியில் இருந்து, 100,000 கி.மீ தூரத்திற்கு மங்கள்யான் முன்னேற்றப்பட இருந்தது.

அந்த வேளையில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து, இஸ்ரோ தனது செவ்வாய்கிரகத் திட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட் செய்தது. மங்கள்யான் விண்கலத்தின் உந்துகைச் செயல்பாட்டில் (புரொபல்சன்) ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக, புவி வட்டப்பாதையின் 4 ஆவது சுற்றுக்கு விண்கலத்தை முன்னேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அக்கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் அப்டேட்ஸ்

இந்தியாவின் செவ்வாய்கிரகத் திட்டத்தை தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் மக்களுக்கு இடைவிடாமல் அப்டேட்ஸை வழங்கி வருகிறது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்பில் இருக்க க்ளிக்குக - >ISRO's Mars Orbiter Mission

SCROLL FOR NEXT