இந்தியா

சிக்குன்குனியா பலி தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவு

பிடிஐ

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் சிக்குன்குனியா நோய் தாக்கத்தால் 6 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி ஸ்ரீ கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் சிக்குன்குனியா நோய் தாக்கத்துக்கு 4 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவமனையில் பலி ஏதும் இல்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஜெயின், "டெல்லியில் நாள் ஒன்றுக்கு 200 பேர் பலியாகின்றனர். ஆனால் அது தொடர்பாக யாரும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. சிக்குன்குனியா நோய் பாதிப்பால் உயிர் பலி ஏற்படுவது மிகவும் அரிது. சில நேரங்களில் சிறு குழந்தைகள் அல்லது வயதானவர்கள் பலியாக நேர்கிறது.

தனியார் மருத்துவமனையில் இறந்தவர்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வந்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்" என்றார்.

டெல்லியில் 5 அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஜெயின் மக்கள் சிக்குன்குனியா மரணம் தொடர்பாக பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT