இந்தியா

பருவமழை பொய்த்ததால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு போதிய நீரை திறக்க முடியாது: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேட்டி

இரா.வினோத்

கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நீர் வளத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் பாட்டீல், காவிரி நீர் நிர்வாக வாரிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு, கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் நீர்மட்டம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவை குறித்து விரிவாக விவாதித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் பாட்டீல் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள்ள ளவை எட்டவில்லை. எனவே மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் குறைந்த அளவில் நீர் இருப்பு உள்ளதால், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுத இருக்கிறார். கர்நாடக அரசின் இக்கட்டான நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா வும், விவசாயிகளும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT