நெடுவாசல், காரைக்கால் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனத்தின் முதுநிலை அதிகாரியும் செய்தித் தொடர்பாளருமான ஹரிபிரசாத் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:
நெடுவாசலில் பணியை எப் போது தொடங்குவதாக திட்டம்?
இந்த திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் நெடுவாசல் மக்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களுடன் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது. 6 மாதங்களில் இந்த ஒப்புதல் பெறப்பட்டு நெடுவாசலில் எங்கள் பணி தொடங்கும். இதன்மூலம் எங்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் நெடுவாசல் மக்கள் உட்பட நாடு முழுமைக்கும் பலன் கிடைக்கும். குறிப்பாக உள்ளூர் மக்களுக்கு இத்திட்டத்தில் 90 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
நெடுவாசல் மக்களை எப்படி சமாளிப்பீர்கள்?
இத்திட்டத்தால் மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவை யில்லை. ஏனெனில் இதற்காக சுமார் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே தேவை. இந்த திட்டம் தொடர்பாக அங்குள்ள மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. இவை அனைத்தும் அரசு உதவியுடன் படிப்படியாக தீர்க்கப்படும். அதன் பிறகு அவர்களின் ஒப்புதலுடன் இந்த திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்துக்கு மக்களிடமும், தமிழக அரசிடமும் ஒப்புதல் பெற, முழு உதவி செய்வதாக மத்திய அரசு எங்களுக்கு உறுதி அளித்துள்ளது.
நெடுவாசலில் என்ன வகை பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இதற்கான ஆய்வை ஓஎன்ஜிசி அங்கு நடத்தியுள்ளது. அதில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக் கும் என தெரிய வந்துள்ளது. ஹைட்ரோ கார்பனுக்காக 2 அல்லது 3 துளைகள் இட உள்ளோம். தரையில் இருந்து 200 முதல் 300 அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரை நாங்கள் எடுக்கப் போவதில்லை. 3000 முதல் 4000 அடி ஆழத்தில் உள்ள ஹைட்ரோ கார்பனை மட்டுமே எடுக்க உள்ளோம். இந்த ஆழத்தில் அங்கு நீர் சிறிது கூட இல்லை.
இதற்கான நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பீர்களா அல்லது விலைக்கு பெறுவீர்களா?
இந்த இருவகையில் எப்படி கிடைத்தாலும் நிலத்தைப் பெறத் தயாராக இருக்கிறோம். அது நெடுவாசல் மக்களை பொறுத்தது. இதற்காக அவர்களை நிர்பந்திக்க மாட்டோம்.
இந்த திட்டத்துக்காக நெடுவாச லில் நீங்கள் செய்யவிருக்கும் விழிப்புணர்வு குறித்து…
ஹைட்ரோ கார்பன் எடுப்பது நம் நாட்டுக்கும் தமிழகத்திற்கும் புதிது அல்ல. ஏற்கெனவே இப்பணி நடைபெறும் இடங்களுக்கு கிராம மக்களை அழைத்துச் சென்று காட்டுவோம். அருகிலுள்ள ஆந்திராவிலும் இப்பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அங்கு எந்தவிதத்திலும் பாதிப்பில்லாமல் விவசாயம் நடை பெறுவதை ஆதாரங்களுடன் நிரூபிப்போம். பத்திரிகைகள் வாயிலாகவும் அதன் நல்ல கருத்துகளை வெளியிடுவோம்.
விழிப்புணர்வு பணியை எப்போது தொடங்குவீர்கள்?
நாங்கள் ஒப்பந்தம் இட்டுள்ள மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநர் ஜெனரல் அலுவலகம் இப்பணியை முதலில் செய்யும். பிறகு ஓஎன்ஜிசி அதிகாரிகள் குழுவும் நெடுவாசல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இறுதி யாக நாங்களும் இப்பணியில் ஈடுபடுவோம். இந்தப் பிரச்சினை தற்போது அரசியலாக்கப்பட் டுள்ளதால் அங்கு போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் நாங்கள் அங்கு முதலில் சென்றால் சரியாக இருக்காது என கருதுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.