உ.பி.மாநிலம் மீரட்டில் உள்ள சாஸ்திரி நகரில் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம் வாலிபரையும் அவரது தோழியையும் தரதரவென இழுத்து வந்தனர் இந்து யுவ வாஹினி அமைப்பினர்.
இந்து யுவ வாஹினி அமைப்பு தற்போதைய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தினால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிம் என்ற நபர் சாஸ்திரி நகரில் உள்ள வீட்டில் தனது தோழியுடன் இருந்த நேரத்தில் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த இந்து யுவவாஹினை அமைப்பினர் அவர்களை அடித்து உதைத்து இழுத்து வந்து காவல் நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
முஸ்லிம் இளைஞரையும் பெண்ணையும் விடுவித்ததாக மீரட் நகர உயர் போலீஸ் அதிகாரி அலோக் பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்து யுவ வாஹினி அமைப்பின் மேற்கு உ.பி. தலைவர் நாகேந்திர பிரதாப் சிங் தோமர் இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “இருவரும் வீட்டினுள் காதல் செய்து கொண்டிருந்தனர்” என்று குற்றம்சாட்டினார்.
அதாவது, வாசிம் முசாபர்நகர் ஹோட்டலில் பணியாற்றி வருவதாகவும் சாஸ்திரி நகரில் வசிக்கும் இவர் அடிக்கடி பெண்ணைக் கூட்டி வந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
“இது அப்பகுதி குழந்தைகளிடையே மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும், செவ்வாயன்று மதநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இப்பகுதி வாசிகள் எங்களிடம் இது குறித்து தெரிவித்தனர். அதனால்தான் நாங்கள் அங்கு சென்றோம்” என்றார் தோமர்.