இந்தியா

குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கடும் சொற்களால் கண்டிக்கிறேன்: மக்களவையில் ராஜ்நாத் ஆவேசம்

செய்திப்பிரிவு

உனா சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கடும் சொற்களால் கண்டிப்பதாக மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசமாக பேசினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று (புதன்கிழமை) குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட விவகாரம் எழுச்சிபெற, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் அரசுக்கு எதிராக இன்று ஒன்றுதிரண்டு கோஷமெழுப்பின.

மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் செய்திகளை வாசித்து முடித்த உடனேயே எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து குஜராத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைக் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

அதிமுக எம்.பி.க்கள் தவிர அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று கேள்வி நேர விவாதங்களுக்கிடையே தங்கல் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

ஆனால் கேள்வி நேரத்தை இடையூறு செய்யக்கூடாது என்று சபாநாயகர் கண்டித்தார். ஆனால் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று கோஷம் போட காங்கிரஸ் கட்சியினர், “தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, 'குஜராத் மாடல் ஷேம் ஷேம்' என்று கடுமையான கோஷங்களை எழுப்பினர். இந்த உரத்த குரல்களை கேட்டபடியேதான் அமர்ந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா போஸ், அணுசக்தி விநியோக நாடுகள் உறுப்பினர் விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜிடம் கேள்வி எழுப்ப, தலித் பிரச்சினைக்கு முதன்மை அளிக்கக் கோரிய எதிர்க்கட்சிகள் அவரை உட்காருமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர் தன் கேள்வியைத் தொடர சுஷ்மா பதிலும் அளித்தார்.

மனிதத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை: பப்பு யாதவ்

ஆரம்பத்தில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்துப் பேச முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தனித்தனியாகக் கோரின.

இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலித் இல்லா இந்தியாவை உருவாக்க முயல்கிறது என்று கூறியுள்ளார்.

எம்.பி. பப்பு யாதவ், மனிதர்களைக் கொடுமைப்படுத்தி பசுவைக் காக்க முடியாது என்றும், ஒரு மனிதனைக் காப்பாற்ற வேண்டுமென்றால், ஒரு லட்சம் பசுக்களைக் கொல்லவும் தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனிதத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு ராஜ்நாத் கண்டனம்:

"உனா (குஜராத்) சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கடுமையான சொற்களால் கண்டிக்கிறேன். கடந்த 11-ம் தேதி தலித் இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தண்டனை மற்றும் அட்டூழிய சட்டத்தின் (Atrocities law) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை தற்போது சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. ஒருவர் இந்த வழக்கைக் கவனித்துக் கொள்கிறார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலவாரியம் இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு 4 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித்துள்ளது.

குஜராத் அரசு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. குஜராத் அரசின் விரைவான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். சுதந்திரம் பெற்று பல தசாப்தங்கள் ஆகியும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் இதை ஒரு சவாலாக ஏற்று இந்தியாவை ஒற்றுமை மிக்க நாடாக மாற்ற வேண்டும்.

தேசிய குற்றவியல் ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி. குஜராத்தில் 1991 முதல் 1999 வரை ஒவ்வொரு வருடத்திலும் சுமார் 1600 - 1700 சம்பவங்கள் தலித்களுக்கு எதிராக நடைபெற்று வந்தன. ஆனால் 2001-க்குப் பிறகு அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எங்களின் அரசு தலித்களுக்கு எதிரான அட்டூழியங்களை ஒழிக்க கடமைப்பட்டுள்ளது.

ஏழைகளையும், தலித்களையும் முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'ஸ்டாண்ட் அப் இந்தியா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT