இந்தியா

பயணியை எழுப்ப மறுத்த ரயில்வேக்கு ரூ. 5,000 அபராதம்

செய்திப்பிரிவு

தூக்கத்தில் இருந்த பயணியை எழுப்பி விட மறுத்த ரயில்வேக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வழக்கு செலவுக்காக தனியாக ரூ.2 ஆயிரம் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கறிஞரான கிரிஷ் கார்க் என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் பீட்டல் ரயில் நிலையத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ரயிலில் (ஜெய்ப்பூர்- கோவை விரைவு ரயில்) ஏறினார். முன்னதாக, ரயில்வேயின் வாடிக்கையாளர் சேவை பிரிவைத் (139) தொடர்பு கொண்ட அவர், கோட்டா ரயில் நிலையத்துக்கு முன்னதாகத் தன்னை எழுப்பி விடுமாறு அறிவுறுத்தினார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட சேவை பிரிவு அதிகாரி, சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வரும்வரை அவரை எழுப்பவில்லை. அதேநேரம், தானாக தூக்கத்தில் இருந்து விழித்த அவர், கோட்டா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட இருந்தபோது அங்கிருந்து அவசர அவசரமாக இறங்கிவிட்டார்.

இதுதொடர்பாக பீட்டல் நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து, ஒப்புக்கொண்டபடி பயணிக்கு சேவை செய்ய மறுத்ததற்காக ரயில்வேக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், வழக்கு செல்வுக்குத் தனியாக ரூ.2 ஆயிரமும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு மாதத்துக்குள் ரயில்வேயின் தலைமை அதிகாரி இந்தத் தொகையைச் செலுத்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீரேந்திர எஸ் பட்டிதர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அவர், தன்னை மன உளைச்சல் அடையச் செய்த ரயில்வே நிர்வாகம் ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது, இதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்த ரயில்வே, வாடிக்கையாளர் சேவை பிரிவு பயணிகளை தூக்கத்தில் இருந்து எழுப்ப உத்தரவாதம் அளிக்காது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT