கேரளாவின் முதல் மெட்ரோ ரயில் சேவையை கொச்சியில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.5,181 கோடி மதிப்பில், 13 கி.மீ. தூரத்துக்கான இந்த மெட்ரோ ரயில் சேவை நாட்டின் 8-வது மெட்ரோ ரயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ சேவையைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி பலரிவட்டம் பகுதியில் இருந்து பத்தடிபாலம் வரையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அவருடன் கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் பயணம் செய்தனர்.
மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "வாசனைப் பொருட்களின் வணிகத்துக்கும் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற கேரளாவில் மெட்ரோ அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது. கொச்சி மெட்ரோவின் தொழில்நுட்ப வசதிகள், டிக்கெட் விநியோகத்தில் தனியாருடனான கூட்டு, சூழல் நட்புடன் செயல்படுவதற்கான திட்டங்கள் ஆகியன வரவேற்கத்தக்கது.
நாட்டிலேயே அதிக அளவிலான மூன்றாம் பாலினத்தவர்களை பணியில் அமர்த்தியது சிறப்பு. 23 மூன்றாம் பாலினத்தவர்கள் முதற்கட்டமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் 1000 பெண்களுக்கு வேலை அளிக்க கொச்சி மெட்ரோ மேற்கொண்டுள்ள முயற்சியும் பாராட்டத்தக்கது" என்றார்.
உரையைத் தொடங்கும்போது மலையாளத்தில் மோடி பேசினார்.
கொச்சி மெட்ரோ சில துளிகள்..
மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்தவுடன், பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பாரம்பரிய செண்டா மேளத்தின் இசையொலி, இலவச வை-பை, முதல் கட்ட பணியிலேயே நீண்ட தூரத்துக்கு பாதை அமைக்கப்பட்டது ஆகியவை கொச்சி மெட்ரோ ரயிலுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இதுதவிர வேறு சில சிறப்புகளும் கொச்சி மெட்ரோவுக்கு இருக்கிறது. மும்பை மெட்ரோ ரயிலின் 11 கி.மீ தூர முதல் கட்ட சேவை தொடங்குவதற்கு 75 மாதங்கள் பிடித்தன. சென்னை மெட்ரோ ரயிலின் 4 கி.மீ தூர முதல் கட்ட பணிகள் முடிவதற்கு 72 மாதங்கள் ஆனது. ஜெய்பூரில் 9.02 கி.மீ தூர பணிகளுக்கு 56 மாதங்களும், 8.5 கி.மீ கொண்ட டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணிகளுக்கு 50 மாதங்களும் பிடித்தன. ஆனால் 13 கி.மீ கொண்ட கொச்சி மெட்ரோ ரயிலின் முதல் கட்டப் பணிகள் வெறும் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கொச்சி மெட்ரோ ரயில் முன்னுதாரணமாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு மின்சாரம் சூரிய சக்தி (சோலார்) மூலம் பெறும் வகையில் 23 நிலையங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 2.3 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இது தவிர 4 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயில் ஓடுவதற்காக அமைக்கப்பட்ட 4,000 தூண்களில், ஒவ்வொரு 6-வது தூணிலும் ‘வெர்டிக்கல் கார்டன்’ அமைக்கப்படவுள்ளது. நகரங்களை சுற்றிப் பார்க்க வசதியாக பயணிகளுக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவச சைக்கிள் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.