இந்தியா

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை குறைப்பு: டீசல் விலை 50 பைசா உயர்வு

செய்திப்பிரிவு

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.107 குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.95 ஆக இருந்தது, இப்போது ரூ.58.56 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை மாற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் வரி, மதிப்பு கூட்டு வரிக்கு ஏற்ப விலையில் மாறுபாடு இருக்கும். முன்னதாக கடந்த 3-ம் தேதிதான் டீசல் விலை 50 பைசா உயர்த்தப்பட்டது.

மத்திய அரசின் புதியமுடிவின்படி வீட்டு உபயோகத்துக்காக 12 காஸ் சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு சந்தை விலை கொடுத்தாக வேண்டும்.

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.1,241 (14.2 கிலோ) இருந்து ரூ.1,134 ஆக (டெல்லி விலை) குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் காஸ் விலை குறைந்துள்ளதால் மானியம் இல்லாத காஸ் சிலிண்டரின் விலை ரூ.107 குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மாதாந்திர நிகழ்வுதான். டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கட்டுப்படுத்த 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் மாதம்தோறும் 50 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. இழப்பு முழுமையாக குறையும் வரை இந்த விலை உயர்வு தொடரும்.

“டீசல் விலை 13-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இப்போதும் ரூ.9.24 இழப்பு ஏற்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு இழப்பு ரூ.762.50 ஆக இருந்தது. இப்போது ரூ.656 ஆக குறைந்துள்ளது” என்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஜனவரி முதல் படிப்படியாக டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஓராண்டில் லிட்டருக்கு ரூ.7.76 உயர்த்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ.35.76 இழப்பு ஏற்படுகிறது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

2013-14-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விற்பனையில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் மொத்தத்தில் ரூ.73,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓராண்டுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் 9 லிருந்து சில தினங்களுக்கு முன்பு 12 ஆக அதிகரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT