இந்தியா

இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் அழகு சாதனப் போலி தயாரிப்புகள் சீன கண்டெய்னரில் சிக்கின

ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் அழகு சாதனப் போலி தயாரிப்புகள் கண்டெய்னரில் சிக்கியுள்ளன. டெல்லியில் பிடிபட்ட இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தவை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு நாடுகளில் இருந்து கண்டெய்னரில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் டெல்லியின் துக்ளக்காபாத்தில் உள்ள இன்லேண்ட் கண்டெய்னர் டெப்போவில் வந்து இறங்குவது வழக்கம். இங்கிருந்து அவற்றை இறகுமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் முறையான இறக்குமதி வரிகளை கட்டி பெற்றுச் செல்லும்.

இவற்றில் சந்தேகத்திற்கு இடமான கண்டெய்னர்களை திறந்து சோதனை இடுவதும் வழக்கமான ஒன்று. இதுபோல், வருவாய்துறை அலுவலர்களால் ஒரு தனியார் நிறுவனத்தின் ஐந்து கண்டெய்னர்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒன்றில், இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் பெயரிலான அழகு சாதனங்களின் போலி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், லக்மே, பேர் அண்ட் லவ்லி, கார்னியர், ரெவ்லான், லாரல், லோட்டஸ், பாண்ட்ஸ், வேஸ்லின் உட்படப் பல்வேறு வகை தயாரிப்புகள் பிடிபட்டுள்ளன. இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து டெல்லியின் வருவாய்துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘எந்த சந்தேகமும் வராத வகையில் அழகு சாதனப் பொருகள் மற்றும் அதன் பேக்கிங்குகள் இருந்தன. பல ஆண்டுகளாக இவை சீனாவில் தயாரிக்கப்பட்டு வேறு பெயர்களில் ரகசியமாக இறக்குமதி செய்து நாடு முவதிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இது எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தி பிடித்துள்ளோம். இவை, சம்மந்தப்பட்ட துறையின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அனைத்தும் போலி தயாரிப்புகள் என உறுதி செய்யப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தனர்.

இவற்றை சீனாவில் இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகியான யோகேஷ் கேரா(31) என்பவர் வடமேற்கு டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக்கில் இருந்து வருவாய்த் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்துறையினரிடம் சிறை இல்லாத காரணத்தால் யோகேஷ், துக்ளக்காபாத் காவல்நிலையத்தின் விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்களின் சந்தை விலை ரூபாய் 5 கோடியே 41 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மருந்து மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டம் 1940-ன் பிரிவு 9சி-யின் கீழ் இது சட்டவிரோதம் ஆகும். இதனால், யோகேஷ் மீது சுங்க சட்டம் 1962-ன் கீழ் 132, 135-ன் 1(ஏ) மற்றும் 1(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் ஆகும். கண்டெய்னரில் இருந்த பொருட்களில், ’மேட் இன் இந்தியா’ என தெளிவாக அச்சடிக்கப்பட்டு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிகுள்ளாகி இருக்கிறது.

SCROLL FOR NEXT