குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலுபிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோர், எம்.பி. பதவியை இழந்ததையடுத்து, அந்த இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்குமாறு மக்களவை செயலருக்கு அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி வலியுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரத்தில், ஏற்கெனவே மக்களவை செயலருக்கு இதனை வலியுறுத்தியுள்ள அட்டர்னி ஜெனரல் , விரைவில் இதனை நிறைவேற்றாவிட்டால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தண்டனையின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, லாலு பிரசாத் யாதவியின் எம்.பி. பதவி பறிக்கப்படுவதுடன், அவரால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ், 1990 ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், சாய்பாஸா மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் மீது, லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக அவர் மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்குகளில் இந்த வழக்கில்தான் முதன் முறையாக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.