பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகரில் அகஸ்தியர் நாடி ஜோதிட நிலையத்தை நடத்தியவர் தாமோதர் (27). இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த வெள்ளிக்கிழமை இவரிடம், பெங்களூருவில் பணியாற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 25 வயது பெண், ஜோதிடம் பார்க்க நண்பருடன் வந்துள்ளார்.ஆண் நண்பரை வெளியே காத்தி ருக்குமாறு கூறிய ஜோதிடர் தாமோதர், இளம்பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று தீர்த்தம் என்று கூறி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். மயங்கிய நிலையில் இளம்பெண்ணை ஜோதிடர் தாமோதர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அந்த இளம்பெண் உள்ளே சென்று 3 மணி நேரம் ஆன நிலையில் அவருடைய நண்பர் கதவைத் தட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்த அந்த பெண், ஜோதிடரிடமிருந்து தப்பிச் சென்று ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜோதிடர் தாமோதரை கைது செய்த போலீஸார், இதே போன்று வேறு பெண்களிடமும் தவறாக நடந்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.