காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளதால் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.
காஷ்மீரில் நிலவிய தொடர் பிரச்சனையாலும் அடுத்தடுத்து குளிர்கால இடைவெளியாலும் பள்ளிகள் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் இருந்தன.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் பள்ளிகள் வழக்கமாக இயங்கும் என்று காஷ்மீர் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் பள்ளிக் கல்வித் துறை தரப்பில், "காஷ்மீரில் பள்ளிகள் இன்றுமுதல் இயங்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுகிறது எனவே மாணவர்களின் மதிப்புமிக்க கல்வி நேரம் இழக்க நேரிடாது என்று நம்புகிறோம்.
எனினும் காஷ்மீரின் மச்செல், குரேஸ், தங்தர் ஆகிய இடக்களில் பனி நீடிப்பதால் அங்கு பள்ளிகள் மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் புர்கான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக ஆறு மாதமாக காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.