டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் வீடு அருகே, காங்கிரஸ் மாணவர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இமாசலப்பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டுக்கு எதிரே பாஜக இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் பி.எஸ். எடியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்கும் முடிவை கண்டித்தும், பாஜகவினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டும், இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர் அணியினர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வீடு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இவர்கள் ராஜ்நாத் சிங் வீட்டை நோக்கிச் செல்ல முயன்றபோது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை விரட்டினர். மேலும் பலரை கைது செய்தனர். - பி.டி.ஐ.