புதுச்சேரி அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி யவர்களைக் கண்டித்து பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவை சேதராப்பட்டு அருகேயுள்ள துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை திங்கள்கிழமை இரவு சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை இதை பார்த்த இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிலையை உடைத்தவர்களைக் கைது செய்யக்கோரியும், புதிய சிலையை வைக்க வலியுறுத்தியும் சேதராப்பட்டு - துத்திப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.
சாலை மறியலால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி, தாசில்தார் யஷ்வந்தையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.