இந்தியா

அரசியல் ஆதாயமே காங்கிரஸின் நோக்கம்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாடு

செய்திப்பிரிவு

தெலங்கானா விவகாரம் மூலம் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் பெறுவதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

ஆந்திரத்தைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அவர், நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே, மத்திய அமைச்சரவையில் தனி மாநிலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சாடினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறும்போது, “ஆந்திரப் பிரதேசத்தின் சீமாந்திரா பகுதி கடந்த 70 நாட்களாக பற்றி எரிகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.

இந்தப் பிரச்சினையை மத்திய அரசிடம் நாங்கள் கொண்டு சென்றோம். நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பினோம். குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினோம். இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

ஒரு பிரச்சினை என்றால், அதை விவாதித்து தீர்வுகாண்பதே ஜனநாயகம். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசோ, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பிரச்சினையை மேலும் அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கிறது. ஆந்திர மக்கள் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனர்.

ஆந்திர மக்களின் பிரச்சினையை தனது கட்சியின் உள்விவாகரம் போல் காங்கிரஸ் கருதுகிறது. அரசியல் மீதுதான் அவர்களுக்கு அக்கறையே தவிர, நாட்டை நிர்வகிப்பதில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. அரசியல் ஆதாயம் இன்றி எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் எடுப்பதில்லை” என்றார் சந்திரபாபு நாயுடு.

இருளில் மூழ்கும் ஆந்திரா

மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளிலும், ராயலசீமாவிலும், பல்வேறு கிராமப் பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயநகரத்தில் வன்முறையில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சீமாந்திராவில் போராட்டம் மென்மேலும் தீவிரமடைவதால், இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 3-வது நாளாக தனது உண்ணாவிரப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.

ஜெகன், சந்திரபாபு மீது திக்விஜய் சாடல்

இதனிடையே, தெலங்கானா விவகாரத்தில் தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு மீது காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கடுமையாக சாடியுள்ளார். இவ்விருவரும் அரசியல் ஆதாயத்துக்காகவே இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி இருவரது நடவடிக்கையும் ஆச்சரியமளிக்கிறது. இருவரும் தெலங்கானாவுக்கு ஆதரவாக காங்கிரஸுக்கு கடிதம் எழுதியவர்கள். அற்புதமான அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT