பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர் ஒருவரின் தலையைக் கொய்தால் நாம் அவர்கள் ராணுவத்தினர் 100 பேரின் தலையைக் கொய்ய தயக்கம் காட்டக்கூடாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லையில் இரண்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று அவர்கள் உடல்களை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்தது நாட்டில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய நிலையில் பாபா ராம்தேவ் இவ்வாறு கூறியுள்ளார்.
“இஸ்ரேல் வழியில் இந்தியாவும் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையைக் கொய்ய வேண்டும். அவர்கள் நம்மில் ஒருவரை ஊனப்படுத்தினாலும், கொன்றாலும் நாம் இப்படி பதிலடி கொடுக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறியதை நான் கண்டேன். என் மகனின் உடல் ஏன் இப்படி சிதைக்கப்பட்டது என்று அவர்கள் கதறியதை என்னால் மறக்க முடியவில்லை” என்றார்.
பதஞ்சலி நுகர்பொருட்கள் பற்றி அவர் கூறும்போது, அடுத்த ஆண்டு உற்பத்தித் திறன் ரூ.60,000 கோடியாக அதிகரிக்கும் என்றதோடு, மஹாத்மா காந்தி, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் கூறியது போல் அயல்நாட்டுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சீனப்பொருட்களை நாம் துறக்க வேண்டும் என்றார்.
“சீனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நாம் சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும். அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவை கொள்ளையடிக்கின்றன” என்று கூறினார்.
மேலும் பிரபல நுகர்பொருள் பிராண்ட்களுக்கு எதிராகவும் அவர் தன் கருத்துகளை தெரிவித்தார்.