"ஏர் டெக்கான்" விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பெங்களூரில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியையும் அமைத்தது. இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அக்கட்சியில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
ஆம் ஆத்மியின் கேப்டன்
பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியும் எழுத்தாளருமான கேப்டன் கோபிநாத், சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இவர் ஏர் டெக்கான், டெக்கான் சாட்டர்ஸ், டெக்கான் 360 உள்ளிட்ட விமான நிறுவனங் களை தொடங்கி, நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கிய வர் என்பதால் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டவர்.
மைசூர் அருகே உள்ள மேல்கோட் டையில் பிறந்த இவர், பெங்களூரில் நீண்டகாலமாக வசித்து வருகிறார். கடந்த காலங்களில் பெங்களூரில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னின்று நடத்தி இருக்கிறார்.
பெங்களூரில் போட்டி
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க. பொதுசெயலாளர் அனந்தகுமாரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது கணிசமான வாக்குகளைப் பெற்றபோதும் கோபிநாத் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், மீண்டும் பெங்களூர் தெற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட கோபிநாத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள கோரமங்களாவில் அதற்கான கலந்துரையாடல் நடத்தினர்.
ஐடி துறையினரும், படித்தவர்களும் பெரும் பான்மை வாக்காளராக இருப்பதாலே, பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் இயக்குநர் நந்தன் நிலகேனி போட்டியிட திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப் படுகிறது. இதனால், அந்த தொகுதியின் இப் போதைய பா.ஜ.க. எம்.பி.யான அனந்த குமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.