பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரியை ஊழல்வாதி என விமர்சித்திருந்தார்.
இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா, விசாரணையை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவை வாசிக்கையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள கேஜ்ரிவால் ஏப்ரல் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.