ஜிஎஸ்டி என்பதன் விரிவாக்கத்தை (முழு வார்த்தைகளை) உ.பி. அமைச்சர் ஒருவர் சொல்லத் தவறியது, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்ஸ் அண்ட் சர்வீஸஸ் டாக்ஸ் (சரக்கு மற்றும் சேவை வரி) என்பதே ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி குறித்து கடந்த பல மாதங்களாகவே நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உ.பி.யில் சமூக நலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ராமபதி சாஸ்திரி. இவர் ஜிஎஸ்டி-யால் ஏற்படும் பலன்களை மக்களிடம் விளக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஜிஎஸ்டி என்பதன் விரிவாக்கத்தை நிருபர் ஒருவர் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
என்றாலும் தனது இயலாமையை மூடிமறைக்கும் வகையில், ''அதன் விரிவாக்கம் எனக்குத் தெரியும். அது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்வதற்காக அனைத்து முக்கிய ஆவணங்களையும் நான் படித்துள்ளேன்'' என்று கூறி மழுப்பினார்.