அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் பென்னி ஹின் பெங்களூர் வருவதற்கு பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜெபக்கூட்டம் நடத்துவதில் உலகப் புகழ் பெற்றவர் பென்னி ஹின். இவரது கூட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடு கின்றனர். ஆசீர்வாத கூட்டங்களின் போது இவர் நோய்களை குண மாக்குவதாகவும், அதிசயங்கள் நிகழ்த்துவதாகவும் கூறப்படுகிறது.
2005-ம் ஆண்டு வன்முறை
இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் ஜெபக் கூட்டம் நடத்தினார். இதில் கர்நாடகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பங் கேற்றனர். அப்போதைய கர்நாடக முதல்வர் தரம்சிங்,முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரிடம் ஆசி பெற்றனர்.
இந்நிலையில் பென்னி ஹின் தனது ஜெபத்தின் மூலம் இந்துக் களை மதம்மாற்ற முயன்றார் என ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பெங்களூ ரில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங் கள் தாக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன. நூற்றுக்கணக் கான அரசு பஸ்களும் நொறுக்கப் பட்டன. மேலும் பென்னி ஹின் மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 5 வழக்குகளும் தொடரப்பட்டன.
பென்னி ஹின் மீண்டும் வருகை
இந்நிலையில் பெங்களூர் ஹெப்பால் பகுதியிலுள்ள பெத்தேல் ஏஜி ஆலயத்தின் சார்பில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பிரார்த்தனை மாநாடு, ஜெபக்கூட்டம், ஆசீர்வாத கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இதில் பென்னி ஹின் கலந்துகொள்வார் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்து அமைப்புகள் எதிர்ப்பு
இந்நிலையில் பென்னி ஹின் பெங்களூர் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில், “ பென்னி ஹின் 2005ல் பெங்களூர் வந்து இந்துக்களின் மனங்களை புண்படுத்தினார். இதனால் வன்முறை ஏற்பட்டது. தற்போது அவரது வருகையால் மாநிலத்தில் மீண்டும் அமைதி குலைய வாய்ப்புள்ளது. எனவே அவரது ஜெபக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது''என்றார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி வந்திருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில், “பென்னி ஹின் இந்து கலாச்சாரத்தை அழிக்கவே இந்தியா வருகிறார். லட்சக்கணக்கான இந்துக்களை மதமாற்றவும் திட்டமிட்டுள்ளார். அவருடைய தவறான நோக்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கர்நாடகத்தின் பல்வேறு மடாதிபதிகளிடம் ஆலோசித்து வருகிறேன். அனைவரும் பென்னி ஹின் வருகையை கண்டித்துள்ளனர்” என்றார்.
இந்நிலையில் பென்னி ஹின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஸ்ரீராம் சேனா அறிவித்துள்ளது. மேலும் அவரது ஜெபக்கூட்டம் நடைபெறும் இடத்தையும் முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
மதம் மாற்ற வரவில்லை
இந்நிலையில் பெத்தேல் ஏஜி ஆலயம் சார்பில் விடுக்கப் பட்டுள்ள அறிக்கையில்,''பென்னி ஹின் இந்துக்களை மதம் மாற்ற வரவில்லை. இந்து கலாச்சாரத்தை அழிப்பது அவரது நோக்கமல்ல. அவருடைய வருகை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.