அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப் பட்ட இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சமூக நல அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஸ்ரீநிவாஸ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒலாத்தேவில் இந்திய இளைஞர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆடம் சுட்டுக் கொன்றார். இனவெறி அடிப்படையில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த மனைவி சுனன்யா.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஸ்ரீநிவாஸின் உடல் நேற்று ஹைதராபாத் வந்தடைந்தது. அவரது உடலைக் கண்டு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். ஆந்திரா, தெலங்கானா மாநில அமைச்சர்கள் ஸ்ரீநிவாஸின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்ரீநிவாஸின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ஸ்ரீநிவாஸின் மரணம் குறித்து அவரது தாயார் பர்வத வர்தினி கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனது இளைய மகன் சாய் கிரணும் அமெரிக்காவில் தான் பொறியாளராக பணியாற்றி வருகிறான். அவன்தான் தனது அண்ணனின் சடலத்தை இங்கு கொண்டு வந்தான். அவனை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்ப மாட்டேன்’’ என்றார். ‘‘என் கணவரின் மரணத்துக்கு அமெரிக்கா பதில் சொல்ல வேண்டும்’’ என ஸ்ரீநிவாஸின் மனைவி சுனன்யாவும் கதறியபடி தெரிவித்தார்.