பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸின் மும்பை - கராச்சி விமானம் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) 120 பயணிகளுடன் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. விமானத்தில் போரா, சிந்தி மற்றும் பார்சி இன மக்கள் அதிகம் பயணித்தனர்.
டெல்லி - கராச்சி விமானமும் திங்கள்கிழமையில் இருந்து தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. லாகூர் முதல் டெல்லி வரை சிறிய ரக ஏடிஆர் விமானம் மட்டுமே இனி இயக்கப்படும்.
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸானது மும்பை - கராச்சி தடத்தில் 1976-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. கார்கில் போரின் போது மட்டும் சிறிது நாட்கள் இயக்கப்படாமல் இருந்தது.
இந்திய, பாகிஸ்தான் எல்லைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய க்ருஷீத் ஃபாத்ரா என்னும் பயணி, ''பாக். சர்வதேச ஏர்லைன்ஸ் சேவை மூலமாகவே எங்கள் உறவினர்களைச் சந்திப்பது சாத்தியமாகி வந்தது. குறிப்பாக அவர்களின் விமானம் வசதியாகவும், கட்டணங்கள் குறைந்த விலையிலும் இருக்கும். விசா பெறுவதில் அத்தனை சிரமம் இருக்காது.
இப்போது கராச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஜூன் 8-ம் தேதி திரும்பும்போது துபாய் வழியாக பயணம் செய்ய வேண்டும்'' என்றார்.
கராச்சியில் இருந்து வந்தவரான அப்துல் அகமது ஷாய்க், சற்றே பதற்றத்துடனும், அமைதியிழந்தும் காணப்பட்டார். பாகிஸ்தானுக்குச் செல்ல மற்ற பிற வழிகளும் இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியவில்லை. ''எங்களின் குடும்பங்களைப் பார்க்க இதுதான் ஒரே வழியாக இருந்தது. இந்த சேவை இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்?
இரண்டு அரசுகளும், இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கே ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடும்பங்களைப் பார்க்கத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார் அவர்.
சேவை நிறுத்தத்தால் மே 11 விமானத்துக்காக முன்பதிவு செய்த 45 பயணிகளின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 15 விமானத்துக்காகவும் 95 பயணிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். மே 28 ரம்ஜானுக்குக்காக இரு நாடுகளுக்கும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.
விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம் குறித்து ஏர்லைன்ஸ் பணியாளர்களுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் வேலையிழப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.
மும்பை - கராச்சி இடையே வாரத்தில் ஒருநாள் இயக்கப்பட்டு வந்த சர்வதேச விமான சேவை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.