இந்தியா

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர்: மொய்லி

செய்திப்பிரிவு

நாட்டின் மிகச் சிறந்த தலைவராகத் திகழும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அவர் (ராகுல்) தனித்துவம் வாய்ந்த தலைவர். நாட்டின் பிரதமர் பதவிக்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர்" என்றார்.

குறிப்பாக, தற்போதைக்கு இளைஞர்களுக்கு ராகுல் காந்தியைப் போன்ற தலைவர்கள்தான் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

"ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி நாட்டின் ஒருமித்த கருத்தாகவே உள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, ராகுல் போன்ற தலைவர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது ஆசியும் அவருக்கு உண்டு" என்றார் மொய்லி.

முன்னதாக, 4 மாநிலத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியிந்தார்.

டெல்லியில் ஜனவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், ராகுல் காந்தி குறித்த வீரப்ப மொய்லியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT