இந்தியா

பைலின் புயலால் கனமழை: ஆந்திரம்,ஒடிஷாவில் உஷார் நிலை

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது.

அந்தமான் தீவுகளை, செவ்வாய்க்கிழமை காலை புயல் தாக்கியது. இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சூறாவளி காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.

பைலின் என பெயரிடப்பட்டுள்ள புயல், அடுத்து ஆந்திரம், ஒடிஷாவை நோக்கிச் செல்வதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒடிஷாவின் பாரதீப்பில் இருந்து 950 கி.மீ., தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளது. அக்.,12ல் கலிங்கப்பட்டினம் - பாரதீப் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் நிலை:

புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திரம், ஒடிஷா அரசுகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

தசரா பண்டிகையை முன்னிட்டு விடுமறைக்கு சென்றிருந்த அரசு ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு ஒடிஷா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேரிடர் மேலாண்மை குழுவினரை முக்கிய இடங்களில் பணியமர்த்தியும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவில், பாலாசூர், பத்ரக், மயூர்பஞ், கியோன்ஜர், தேன்கனால், ஜஜ்பூர், கட்டாக், கேந்திரப்பா, ஜகதீஸ்சிங்பூர், புரி, குர்தா, நயாகர், கஞ்சம், கஜபதி ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை அமலில் உள்ளது.

ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT