மத்திய பல்கலைக் கழகங்களில் தலித் மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9-ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) மாநிலங்களவை கூடியது.
இதில் தமிழக மாநிலங்களவை எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட்) டி.ராஜா, ''மத்திய பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு உள்ளது. அவர்களுக்கான அரசாணை எங்கே? ஜவஹர்லார் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தலித் இளைஞர் பரிதாபமான முறையில் மரணித்துள்ளார். அவரால் எப்படி இந்த முடிவுக்கு வர முடிந்தது?
நம்முடைய மத்திய பல்கலைக்கழகங்கலில் ஏன் இத்தனை பாகுபாடு? இதுகுறித்து அரசு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பல்கலைக்கழக சேர்க்கைக் கொள்கை உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சினைகளையும் நாம் கவனிக்க வேண்டும்'' என்றார்.
இதைத் தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி. பேசும்போது, ''ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். முத்துக்கிருஷ்ணன் மின் விசிறியில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அங்கு தற்கொலைக் குறிப்போ, மரணத்துக்கான காரணமோ இல்லை. தலித் மாணவர்கள் பொருளாதார இடர்ப்பாடுகள் மற்றும் சமூக பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்'' என்று கூறினார்.
சமாஜ்வாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், ''மனித வள நல்வாழ்வுத்துறை அமைச்சர் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.