இந்தியா

மியான்மரின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இதயபூர்வ ஒத்துழைப்பு: உறுதி அளித்த இந்தியா

பிடிஐ

ராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்டு, ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள மியான்மருக்கு அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் இதயப்பூர்வமாக ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

மியான்மர் அதிபர் யு ஹ்தின் கியாவ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மியான்மரில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி ஆட்சி அமைத்த பிறகு, அந்நாட்டின் அதிபர் இந்தியா வந்து, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்துவது இதுவே முதல் முறை.

பிரதமர் மோடியும், மியான்மர் அதிபர் யு ஹ்தின் கியாவும் பேச்சுவார்த்தைில் ஈடுபட்டனர். இருதரப்பிலும் தகவல் தொடர்பு, மருத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண்மை, வங்கி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுதொடர்பாக ஊடகங்களை அதிபர் ஹ்தின் கியாவுடன் இணைந்து சந்தித்தி பிரதமர் மோடி கூறியதாவது:

இருநாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு நலன்களை அங்கீகரித்துள்ளன. இப்பிராந்தியத்தில் தீவிரவாதம், ஊடுருவலை எதிர்த்து போராடுவதற்கு இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்து செயல்பட அதிபரும் நானும் ஒப்புக் கொண்டோம்.

மியான்மரின் ஒவ்வோர் அடியிலும் இந்தியாவின் 125 மக்கள் நண்பர்களாக இணைந்திருப்பார்கள். இருநாடுகளின் உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மியான்மரின் ஒளிமயமான எதிர்காலம் உங்களின் (மியான்மர்) குறிக்கோள் மட்டுமல்ல, எங்களின் விருப்பமும் கூட.

பருப்பு வர்த்தகத்தில் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் நீண்ட காலத்துக்கு இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாக மியான்மர் உள்ளது.

மியான்மர், இந்தியாவின் நெருக்கமான அண்டை நாடுகளுள் ஒன்று. வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் பயிற்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்படுவது குறித்த கவலையை இந்தியா எழுப்பியுள்ளது.

இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தில் கலேவா-யார்கி இடையே 69 பாலங்களைக் கட்ட உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இவ்வாறு மோடி தெரிவித்தார்.

மியன்மர் அதிபர் ஹ்தின் கியா பேசும்போது, “இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த மியான்மர் விரும்புகிறது” என்றார்.

மியான்மரில் மிகப்பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதை சீனா அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT