மின்சார விநியோக பிரச்சினையை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக பிரதமர் மோடி சித்தரிக்கிறார் என உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 8-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஜவுன்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி சார்பில் திங்கட்கிழ்மை நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
''தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையைவிட ரம்ஜான் பண்டிகை அன்று மாநில அரசு அதிக அளவில் மின்சாரம் விநியோகம் செய்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். இதன் மூலம் அவர் இந்து-முஸ்லிம் பிரச்சினைக்கு தூபம் போடுகிறார். ஆனால், அவரது குற்றச்சாட்டுப்படி நமது அரசு பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை. இதொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி டெல்லியில் தங்கியிருக்க விரும்பாமல் உத்தரப் பிரதேசத்தில் தங்க விரும்பினால் அவர் இடத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
மோடியின் வாரணாசி தொகுதியில் நானும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்குதான் என்று உறுதியாக நம்புகிறேன்.
தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், பாஜக ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் எவ்வளவு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அவரால் கூற முடியுமா?'' என அகிலேஷ் கேள்வி எழுப்பினார்.