மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ஒன்றும் 'கூண்டுக் கிளி' அல்ல என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிபிஐ, காங்கிரஸின் ஒரு அங்கம் என்று சொல்வதிலும் உண்மை இல்லை என்றார்.
சிபிஐ ஒரு சுதந்திரமற்ற கூண்டுக் கிளியாக இருப்பதாக அண்மையில் உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது.
நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நீதிபதிகளுக்கு வழங்க சிபிஐ தரப்பில் தயார் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், அரசு அதிகாரிகள் தலையீடு இருந்ததாக சிபிஐ உயர் அதிகாரியே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபோது, நீதிமன்றம் இவ்வாறாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் சிபிஐ சார்பில் நடத்தப்படும் 3 நாள் ஊழல் தடுப்பு கருத்தரங்கின் 2-வது நாளான இன்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர்: சிபிஐ அமைப்பு கூண்டுக் கிளி அல்ல, மத்திய அரசு சொந்த நலனுக்காக சிபிஐ- விவகாரங்களில் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டும் தவறானது என்றார்.
முன்னதாக நேற்று கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்: புலனாய்வு அமைப்புகள் அரசின் கொள்கை முடிவுகளை அலசி ஆராய்ந்து தீர்மானிக்கக் கூடாது, இதனால் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு அதிகாரிகளுக்கு தேவையில்லாத அச்ச உணர்வு ஏற்படுகிறது என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சூசகமாக உணர்த்தியிருந்தார்.
அரசின் கொள்கைகளை வகுப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு கொள்கையையும் வரையறுப்பது பல அடுக்குகள் கொண்ட நடைமுறை. இந்த கொள்கை முடிவுகளை புலனாய்வு விசாரணை அமைப்புகள் அலசி ஆராய்வது சரியான நடவடிக்கை அல்ல எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் சிதம்பரமும் சிபிஐ, அமைப்பை விமர்சித்துள்ளார்.