இந்தியா

அரசின் எதிர்ப்பு எதிரொலி: முத்தப் போராட்டத்தை அனுமதிக்க பெங்களூர் போலீஸ் மறுப்பு

இரா.வினோத்

பொது இடத்தில் முத்தமிடுவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. இச்செயலால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். அதனால் பெங்களூருவில் முத்தப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க முடியாது என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜக, சிவசேனா, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் கேரளத்தில் உள்ள தனியார் விடுதியில் முத்தமிட்ட காதலர்களை இந்துத்துவா அமைப்புகள் தாக்கினர். இதனை கண்டித்து கொச்சியில் ‘அன்பின் முத்தம்' என்ற பெயரில் மனித உரிமை ஆர்வலர்கள் முத்தப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெங்களூருவில் கடந்த 22-ம் தேதி முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக மனித‌ உரிமை ஆர்வலர் ரெய்சிடா தனஞ்சே அறிவித்தார். இதற்கு பாஜக, சிவசேனா, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் அறிவித் தனர். இதையடுத்து, முத்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மற்றும் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆகியோர், 'முத்தப் போராட்டம் கலாச்சாரத்துக்கு எதிரானது. பொது இடத்தில் முத் தமிடுவது அநாகரிகமானது'' என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தடையை மீறுவோம்

இந்நிலையில், ‘அன்பின் முத்தம்' அமைப்பினர், “வரும் 30-ம் தேதி பெங்களூரு எம்.ஜி.சாலையில் போலீஸாரின் தடையை மீறி முத்தப் போராட்டம் நடத்தப்படும். இதில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், எழுத்தாளர் களும், கலைஞர் களும் கலந்து கொள்கிறார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது. எங்களை தாக்குவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்' என்று அறிவித்துள்ளனர்.

அனுமதி மறுப்பு

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முத்தப் போராட்டம் நடத்துவதற்கான நோக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. எனவே, அதற்கு அனுமதி அளிக்க முடியாது. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கருத்துப்படி பொது இடத்தில் முத்தமிடுவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது. இச்செயலால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். தடையை மீறி முத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT