இந்தியா

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 21 கிரிமினல் வேட்பாளர்கள்

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ள முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் 21 கிரிமினல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிட முடியாமல் சிறையில் உள்ள சிலர் தங்கள் மனைவியை களமிறக்கி உள்ளனர்.

கிரிமினல்கள் அரசியல்வாதி களுக்கு பெயர்போன மாநிலம் பிஹார். ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, இங்கு முதல்கட்ட தேர்தல் போட்டியில் உள்ள 80 வேட்பாளர்களில் 21 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த 21-ல் 12 பேர் மீது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆள் கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் என முக்கிய வழக்குகள் பதிவாகி உள்ளன.

கராகட் தொகுதியில் ராஷ்டிரிய சேவா தளம் சார்பில் போட்டியிடும் பிரதீப் குமார் ஜோஷி மீது அதிக அளவாக 17 வழக்குகள் பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக ஆளும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கௌஷல் யாதவ் மீது 12 வழக்குகள் உள்ளன.

பாஜகவின் நான்கு வேட்பாளர்களில் மூவர் மீதும் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆறு வேட்பாளர்களில் மூவர் மீதும் ஆம் ஆத்மி கட்சியின் ஆறு வேட்பாளர்களில் இரண்டு பேர் மீதும் கிரிமினல் குற்றங்கள் பதிவாகி உள்ளன.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஐக்கிய ஜனதா தளத்தின் சாசாராம் தொகுதி வேட்பாளருமான கே.பி.ராமய்யா மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக கிரிமினல் வழக்கு பதிவாகி உள்ளது.

இவர்கள் மட்டுமல்லாது, பிரபல கிரிமினல் குற்றவாளிகளான முகம்மது சகாபுதீன், பப்பு யாதவ், சூரஜ் பான்சிங், முன்னா சுக்லா, ஆனந்த் மோகன் சிங் மற்றும் ராம்வீர் யாதவ் ஆகியோரின் மனைவிகள் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறனர். இதில், சகாபுதீன், ஆனந்த்மோகன் சிங் மற்றும் முன்னா சுக்லா ஆகிய மூவரும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

சகாபுதீன் தனது மனைவி ஹினா சஹாப் சிவான் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறையும் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஹினா, இரண்டாவது முறையாக வேட்பாளராகி உள்ளார். இக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய சகாவான கணவர் சகாபுதீனும் அக்கட்சியின் முன்னாள் எம்பி ஆவார்.

கொலை வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலையான பப்பு யாதவ், மாதேபுராவில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவை எதிர்த்து போட்டியிடுகிறார். இவரது எம்பி மனைவி ரஞ்சித் ரஞ்சன், காங்கிரஸ் சார்பில் சுபோலில் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT