இந்தியா

முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க தமிழகத்தின் ஆதரவு முக்கியம்: பினராயி விஜயன்

செய்திப்பிரிவு

சர்வதேச நிபுணர்களைக் கொண்டு முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது, “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. அணைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. கேரள முதல்வரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் மாநிலத் தலைவர் வி.எம். சுதீரன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் திருவனந்த புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயனிடம் முல்லை பெரியாறு விவகாரத்தில் அவரது நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டிய அவசியம் இல்லை. இது புதிய விவகாரம் அல்ல. ஏதேனும் புதிய விவகாரம் என்றால் மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது அவசியமாகும்.

முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையில் மாற்றம் இல்லை. ஆனால் நாம் தனியாக அணை கட்டிவிட முடியாது. தமிழக அரசின் ஆதரவும், மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு தேவை.

அணை வலுவாக உள்ளதாக தமிழகம் நம்புகிறது. நூறாண்டு பழமை வாய்ந்த அந்த அணை பலம் இழந்துள்ளதாக கேரளா சொல்கிறது. கேரளாவின் வாதத்தை தமிழ்நாடும் உச்ச நீதிமன்றமும் ஏற்கவில்லை. எனவே அணையின் பலத்தை சர்வதேச நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க தமிழகத்தின் ஆதரவு முக்கியம். மோதலில் ஈடுபடுவதன் மூலம் இதை நாம் சாதிக்க முடியாது. அந்த நோக்கமும் நமக்கு இல்லை. பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

கேரள மக்களின் பாதுகாப்புக்காக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கூறிய முல்லை பெரியாறு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் விவாதித்தேன். எனது கருத்துக்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்க வில்லை. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். சர்வதேச நிபுணர்களைக் கொண்டு அணை யின் பலத்தை நாங்கள் ஆய்வு செய்வோம்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்

SCROLL FOR NEXT