இந்தியா

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் அட்டர்னி ஜெனரல் பதவியை கொண்டு வர முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை கொண்டு வர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு, ‘மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவி என்பது பொது சொத்தாகும். எனவே அந்தப் பதவியை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வரலாம்’ என கடந்த 2015, மார்ச் 10-ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஜி.ரோகிணி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து வந்தது. மேல்முறையீடு தொடர்பான வாதங்கள் நடைபெற்றபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், ‘‘அரசின் நம்பிக்கைக்கு பாத்திரமான வகையில் அட்டர்னி ஜெனரல் பணியாற்றி வருவதால், அந்தப் பதவியை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது’’ என்ற வாதத்தை முன் வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ‘‘சட்ட விவகாரங்களில் அரசுக்கு அட்டர்னி ஜெனரல் பதவியை பொது சொத்தாக கருத முடியாது. எனவே தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் அட்டர்னி ஜெனரல் பதவியை கொண்டு வரலாம் என்ற உத்தரவை ரத்து செய்கிறோம்’’ என தீர்ப்பளித்தனர்.

SCROLL FOR NEXT