அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் குமார். இவர் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடி நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து அவர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தீப் குமார் நேற்று கூறும்போது, “தலித் என்பதால் எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த சிடி போலியானது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். கட்சியில் தலித் சமூகத் தின் முகமாக நான் இருந்தேன். எங்கள் சமூக மக்களிடையே செல்வாக்குடன் இருந்து வரு கிறேன். எனவே எனக்கு எதிராக சதி நடந்துள்ளது” என்றார்.
இதனிடையே கேஜ்ரிவால் நேற்று விடுத்துள்ள செய்தியில், “சந்தீப் குமார் எங்கள் இயக் கத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். தவறுகளை மூடிமறைக்க மாட்டோம். ஆதாரங்கள் கிடைத்தால் உடனே நடவடிக்கை எடுப்போம். இதுவே எங்களை பிற கட்சிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சந்தீப் குமார் போன்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்தீப் குமாரை ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் நேற்று முதல்வர் கேஜ்ரிவால் வீட்டு முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.