இந்தியா

இந்திய - ஆப்பிரிக்க மாணவர்கள் உறவை பலப்படுத்த நொய்டாவில் கால்பந்து ஆட்டம்

புருஷார்த் ஆராதக்

கடந்த சில நாட்களாக ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வகையில் நொய்டாவில் கால்பந்து ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கவுதம் புத் நகர் நிர்வாகம், இன்று (புதன்கிழமை) அறிவுப் பூங்காவில் மாலை 4 மணிக்கு கால்பந்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. போட்டியில் இரு அணிகளிலும் இந்திய மற்றும் ஆப்பிரிக்க மாணவர்கள் இணைந்து விளையாடுவார்கள்.

கால்பந்து ஆட்டத்தை வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் படிக்கும் சாரதா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகிறது. ஆட்டத்துடன் பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய கவுதன் புத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் என்.பி.சிங், ''நீண்ட காலமாக இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது. சில விரும்பத்தாத சம்பவங்களால் அவை மாறி விடாது. இருப்பிலும் மாணவர்களுக்கு இடையேயான நட்பை பலப்படுத்த இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்தோம்.

ஆட்டத்துக்கு முன்னதாக, இந்திய மாணவர்கள் ஆப்பிரிக்க பாடலைப் பாடுவர். அதேபோல ஆப்பிரிக்க மாணவர்களும் இந்தி பாடலைப் பாட உள்ளனர்'' என்றார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்...

சாரதா பல்கலைக்கழக வேந்தர் பி.கே.குப்தா 'தி இந்து'விடம் கூறும்போது, ''எங்கள் பல்கலைக்கழகத்தில் சுமார் 1400 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 500 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளின் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையிலான உறவு பலப்படும்'' என்று தெரிவித்தார்.

இந்திய ஆப்பிரிக்க மாணவர்கள் இடையே நடைபெறும் கால்பந்து விளையாட்டைக் காண, உகாண்டா, கென்யா, சோமாலியா மற்றும் சூடான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT