இந்தியா

ஜூலை 17-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த், மீரா குமார் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்பு - 93 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

பிடிஐ

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. 93 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 28-ம் தேதியுடன் முடிந்தது. இந் நிலையில், இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 95 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வாக்காளர் குழுவைச் சேர்ந்த போதுமான உறுப்பினர்கள் முன்மொழியாத காரணத்தால், மற்ற 93 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தேர்தல் விதிமுறைப்படி, குடியரசுத் தலைவர் வேட்பாளரின் வேட்பு மனுவில், குறைந்தபட்சம் வாக்காளர் குழுவைச் சேர்ந்த 50 உறுப்பினர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மக்களவை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT