இந்தியா

செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் மீது கருப்பு பெயின்ட் வீச்சு

செய்திப்பிரிவு

டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஒருவர் கருப்பு பெயின்ட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னை அண்ணா ஹசாரேவின் ஆதராவளர் என்று சொல்லிக்கொண்ட அந்த நபர், மக்களுக்கு கேஜ்ரிவால் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறினார்.

டெல்லியில் தனது ஆதரவாளர்களான மனிஷ் சிசோதியா, சஞ்சய் சிங், வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் சாந்தி பூஷன் ஆகியோருடன் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அந்தக் கூட்டத்தில் நுழைந்த ஒரு நபர், 'அண்ணா ஹசாரே ஜிந்தாபாத்' என்று சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்திருந்த கருப்பு பெயின்ட்டை கேஜ்ரிவால் மீது வீசினார். அதில் சிறிதளவு பெயின்ட் கேஜ்ரிவால் முகத்தில் பட்டது. உடனடியாக, அந்த நபரை ஆம் ஆத்மி கட்சியினர் அப்புறப்படுத்தினர்.

நச்சிகேதா வாக்ரேகர் என்ற அந்த நபர், தன்னை மகாராஷ்டிராவின் பாஜக தொண்டர் என்றும், அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர் என்றும் சொல்லிக்கொண்டார். அண்ணா ஹசாரேவுக்கும் மக்களுக்கும் கேஜ்ரிவால் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தச் சம்பவம் குறித்து கேஜ்ரிவால் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியின் புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் சிலரால் இதுபோன்ற செயல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

டெல்லி தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று அவர் கூறினார். குறிப்பாக, டெல்லியில் பாஜகவை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று சொன்னார்.

SCROLL FOR NEXT