மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் சட்டசபையில் செய்து காட்டியதையடுத்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“நீங்கள் (பாஜக) உ.பி.யிலோ அல்லது டெல்லியிலோ வெற்றி பெறவில்லை. இந்த எந்திரம் வெற்றி பெற்றுத் தந்துள்ளது. சவுரவ் பரத்வாஜ் இன்று இதனை நிரூபித்ததற்கு நாம் அவருக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
சாதாரண மக்களுக்காக அவர் இவிஎம் எந்திரத்தில் எப்படி முறைகேடு செய்ய முடியும் என்பதை செய்து காட்டியுள்ளார். எந்திரத்தின் மாயாத் தன்மையை நாட்டின் நன்மைக்காக உடைத்துள்ளார். பிற கட்சிகள் மட்டுமல்ல, இந்த ஜனநாயகத்தின் ‘உரிமையாளர்’ கூட உட்கார்ந்து இதனை ஊன்று கவனிக்க வேண்டும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது இந்தியாவின் ஆன்மா. இவிஎம் எந்திரம் பற்றி நாங்கள் ஒன்றும் சும்மா கூறவில்லை. மும்பையில் வேட்பாளர் ஒருவர் தன் குடும்ப வாக்குகள் எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பிய பிறகே நாங்கள் இவிஎம் மீதான சந்தேகங்களை எழுப்பினோம்.
தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பத்திரிகையாளர்களை வணங்குகிறேன். நாங்கள் எப்போது இவிஎம் பற்றி பேசினாலும் ஒருவரியில் அது மறுக்கப்பட்டு வந்தது. 90 விநாடிகள் போதும் உங்கள் போலீஸ், உங்கள் ஆட்சியதிகாரத்தின் பார்வையிலேயே செய்து விட முடியும். குஜராத் தேர்தல் வருகிறது, எங்கு இவிஎம் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த அரசு கிட்டங்கிக்குள் செல்ல எங்களை அனுமதியுங்கள், நீங்கள் விருப்பப்பட்டால் நாங்கள் ஹேக் செய்து காட்டுகிறோம்” என்றார்.
இந்த நிரூபிப்பு செயலுக்கு முன்பாக கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், “சவுரவ் பரத்வாஜ், நாட்டின் மிகப்பெரிய சதியை அம்பலப்படுத்துவார், சத்யமேவ ஜெயதே” என்றார்.